search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீமான் கைது"

    சேலம்-சென்னை 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த சீமானை போலீசார் திடீரென கைது செய்தனர். #ChennaiSalemExpressway #Seemanarrested
    சேலம்:

    சேலம் அருகே உள்ள காமலாபுரம் கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 160 ஏக்கர் நிலப்பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட் டது.

    பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    கடந்த மே மாதம் 12-ந் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமான நிலைய விரிவாக்கத்தினால் பாதிக்கப்படும் விவசாயிகளை சந்தித்து பேசினார்.

    இதற்கு எதிராக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரசுக்கு எதிராக விவசாயிகளை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஓமலூர் போலீ சார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சீமான் முன்ஜாமீன் பெற்றார்.

    சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. ஓமலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சீமான் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ் மறு உத்தரவு வரும்வரை ஓமலூர் போலீஸ் நிலையத்தில் சீமான் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்து போடவேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து அவர் தினமும் ஓமலூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார்.



    இந்த நிலையில் சீமான் சேலம்-சென்னை 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட பாரப்பட்டி அருகே உள்ள பூமாங்கரடு பகுதிக்கு சென்று விவசாயிகளை சந்தித்தார். அப்போது அங்கு சென்ற போலீசார், விவசாயிகளை சந்திக்க அனுமதி இல்லை என்று தெரிவித்தனர்.

    இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சீமானும் விவசாயிகளை சந்திக்காமல் செல்ல மாட்டேன் என்று கூறினார். அப்போது போலீசார் சீமானை திடீரென கைது செய்தனர். இதைப்பார்த்த பொதுமக்கள் அவரை கைது செய்யக்கூடாது எனக்கூறி தரையில் விழுந்து அழுது புரண்டனர்.

    ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் சீமானை வேனில் ஏற்றி போலீசார் அழைத்து சென்றனர். இதனால் போலீஸ் வேனை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் அப்புறப்படுத்தினர்.

    சீமானுடன் நாம் தமிழர் கட்சி மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் ஜானகி மற்றும் திருநங்கை தேவி உள்பட 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சீமான் உள்ளிட்ட அனைவரும் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

    சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக பொதுமக்களை சந்தித்த அரசியல் பிரமுகர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    நடிகர் மன்சூர் அலிகான், ஆம்ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் ஆகியோர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் சீமானையும் சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #ChennaiSalemExpressway  #Seemanarrested

    ×